திங்கள், 19 ஜனவரி, 2015

RTI actions- காங்கிரஸ் தலைவர் சோனியா

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்காதது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய 6 தேசியக் கட்சிகளும் பொது அமைப்புகள் என்றும் அவை தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிலளிக்க கடமைப்பட்டவை என்றும் மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) அறிவித்திருந்தது.
இந்நிலையில், தகவல் உரிமை ஆர்வலரான ஆர்.கே.ஜெயின், சில விவரங்களைக் கோரி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மனு அனுப்பினார். அதற்கு காங்கிரஸ் பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில், தனது மனுவுக்கு பதிலளிக்காத காங்கிரஸ் கட்சி மீது மத்திய தகவல் ஆணையத்தில் ஆர்.கே.ஜெயின் புகார் அளித்தார். பின்னர், அந்தப் புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு அவர் கோரியிருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், அவரது புகாரின்பேரில் ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களைத் தரவேண்டும் என்ற உத்தரவைப் பின்பற்றாதது ஏன்? என்பது குறித்து விளக்கமளிக்குமாறும், தகவல் கோரி கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்காதது ஏன் என்று விளக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக